வாலிபரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
வெட்டி கொலை
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி வ.உ.சி.நகரை சேர்ந்தவர் சரவணன் என்ற பட்டறை சரவணன் (வயது 30). இவர், திண்டுக்கல் கிழக்கு பகுதி தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி இரவு அண்ணாநகரில் மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற அவரை, காரில் வந்த கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இதற்கிடையே திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிக்முகமது (29), பேகம்பூர் பகுதியை சேர்ந்த முகமதுமீரான் உள்பட 8 பேர் சரவணன் கொலை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிக்முகமது மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
காவலில் எடுத்து விசாரணை
பின்னர் திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஆசிக்முகமதுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மேற்கு போலீசார், போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன் பேரில் நேற்று திருச்சி சிறையில் இருந்த ஆசிக்முகமதுவை மேற்கு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் மீண்டும் போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். இதேபோல் திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட தலைவர் மாரிமுத்து கொலை முயற்சி வழக்கு தொடர்பாக வேடசந்தூர் கோர்ட்டிலும் ஆசிக்முகமது நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.