மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி

நெல்லையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நடந்து சென்ற லாரி டிரைவர் ஒருவர் காயம் அடைந்தார்.

Update: 2023-05-27 20:14 GMT

நெல்லையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நடந்து சென்ற லாரி டிரைவர் ஒருவர் காயம் அடைந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர்

நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் உள்ள பாண்டித்துரை 3-வது தெருவை சேர்ந்தவர் வள்ளிகணேஷ் (வயது 53). இவர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 23-ந்தேதி இரவு இவர் பணி முடிந்ததும், மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் பாளையங்கால்வாய் அருகில் வந்தபோது, அந்த வழியாக திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி வெள்ளாளன்விளையை சேர்ந்த லாரி டிரைவர் செந்தூர்பாண்டி (43) நடந்து சென்றார்.

மோட்டார் சைக்கிள் மோதியது

அப்போது எதிர்பாராதவிதமாக வள்ளிகணேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் செந்தூர்பாண்டி மீது மோதியது. இதில் வள்ளிகணேஷ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். செந்தூர்பாண்டியும் காயம் அடைந்தார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பரிதாப சாவு

பின்னர் வள்ளிகணேஷ் மேல் சிகிச்சைக்காக் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்