போலீஸ் நிலைய வரவேற்பாளர்கள் புகார்தாரர்களை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டுகோள்
போலீஸ் நிலைய வரவேற்பாளர்கள் புகார்தாரர்களை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நிலைய வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு பணிபுரியும் நிலைய வரவேற்பாளர்கள் அனைவரும் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் நபர்களின் விவரங்கள், எத்தகைய புகார்கள் என பதிவேடுகளில் எழுதி பராமரித்தும் வருகின்றனர். மேலும் புகார் அளிக்க வருபவர்கள் முதியவர்கள் எனில் புகார் மனு எழுதிக்கொடுத்தும் வருகின்றனர். இந்தநிலையில் அவர்கள் எவ்வாறு பணிபுரிகின்றனர். பதிவேடுகளில் சரியான முறையில் தகவல்கள் பதிவேற்றப்படுகிறதா? என்பதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி ஆய்வு செய்தார். மேலும் ஆய்வு முடிந்தவுடன் நிலைய வரவேற்பாளர்கள் அனைவரும் புகார் அளிக்க வரும் புகார்தார்கள், முதியோர்கள் என ஒவ்வொருவரையும் நல்ல முறையில் வரவேற்று, அவர்களை அமர வைத்து பணிவுடன் அணுக வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார். போலீஸ் நிலையங்களுக்கு வரும் அனைத்து புகார்தாரர்களுமே, அவர்களது பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கையுடனே வருகிறார்கள். அவ்வாறு வரும் புகார்தாரர்களுக்கு குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை வரவேண்டுமெனில், முதலில் நிலைய வரவேற்பாளர்கள் அவர்களை அணுகும் விதம் பணிவாகவும் மனிதாபிமானத்துடனும் இருக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.