வழக்குகளில் சிக்கியவர்களை போலீசார் சித்ரவதை செய்யக்கூடாது

வழக்குகளில் சிக்கியவர்களை போலீசார் சித்ரவதை செய்யக்கூடாது என்று கோவையில் நீதிபதி எம்.என்.செந்தில்குமார் பேசினார்.

Update: 2023-06-26 23:30 GMT

கோவை

வழக்குகளில் சிக்கியவர்களை போலீசார் சித்ரவதை செய்யக்கூடாது என்று கோவையில் நீதிபதி எம்.என்.செந்தில்குமார் பேசினார்.

சிறப்பு நிகழ்ச்சி

கோவை வக்கீல் சங்கம் சார்பில் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின சிறப்பு நிகழ்ச்சி கோவை கோர்ட்டு வளாகத்தில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் கே.எம்.தண்டபாணி தலைமை தாங்கினார். மனித உரிமை பிரிவு தலைவர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.

விழாவில் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) எம்.என்.செந்தில்குமார் கலந்து கொண்டு சித்ரவதையில் பாதிக்கப்பட்டடோருக்னான சட்ட விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சித்ரவதை செய்யக்கூடாது

சர்வதேச சித்ரவதை தடுப்பு சட்டம் ஐ.நா. சபையின் ஒப்புதலை பெற்று கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்த சட்டத்தை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் சவாலாக இருக்கிறது. வழக்குகள் தொடர்புடைய எந்த ஒரு நபரையும் போலீசார் சித்ரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற கூடாது.

அதுபோன்று திருட்டுபோன பொருட்களை மீட்பதற்காக அந்த நபர் துன்புறுத்தப்பட்டால், அவ்வாறு துன்புறுத்தும் நபர் காவல்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

பயன்தராது

கைதியை துன்புறுத்திதான் விசாரணை செய்ய வேண்டும் என்பது பழங்கதையாகிவிட்டது. சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் அது காவல்துறைக்கு எந்த வகையிலும் பயன் தராது.

இதுபோன்ற விசாரணை முறைகளை தடுக்கும் நோக்கத்தோடு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றை எவ்வித மீறலும் இல்லாமல் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் செயலாளர் திருநாவுக்கரசு, அமைப்பாளர் சாரதி உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்