துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீஸ் சுட்டு பிடித்தது
கோவை அருகே துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீஸ் சுட்டு பிடித்தது. காலில் காயமடைந்த அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை,
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி (வயது 31). இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் கோவை மாநகர பகுதியில் பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவை சிவானந்தபுரத்தை சேர்ந்த ரவுடியான சஞ்சய் ராஜா (36) என்பவருக்கும், சத்தியபாண்டிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
சுட்டுக்கொலை
அதில் சத்தியபாண்டி, சஞ்சய் ராஜாவை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி ஆவாரம்பாளையம் சாலையில் நின்றிருந்த சத்தியபாண்டியை, சஞ்சய் ராஜா உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும்கொலை செய்தனர். இதுதொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
முக்கிய நபர் சரண்
இதற்கிடையே அந்த கும்பலை சேர்ந்த சஞ்சய் குமார், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகியோர் அரக்கோணம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோவை அழைத்து சென்று, விசாரணை நடத்தினார்கள்.
அதில் தலைமறைவான சஞ்சய் ராஜாதான் சத்தியபாண்டியை துப்பாக்கியால் சுட்டதாகவும், அவரிடம் 2 துப்பாக்கிகள் இருப்பதாகவும் தெரியவந்தது. இந்தநிலையில் சஞ்சய் ராஜா கடந்த 21-ந் தேதி சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மலைக்கு அழைத்துச்சென்றனர்
அவரை கோர்ட்டு அனுமதியுடன் தனிப்படை போலீசார் விசாரணைக்காக கோவை அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.
தொடர்ந்து நேற்று முன்தினம் சிவானந்தாபுரத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை எங்கே மறைத்து வைத்து உள்ளீர்கள் என்று போலீசார் கேட்டனர். அதற்கு அவர், கோவை அருகே கரட்டுமேடு பகுதியில் உள்ள சிறிய மலையில் மறைத்து வைத்து இருப்பதாக கூறினார்.
இதையடுத்து சஞ்சய் ராஜாவை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா தலைமையிலான தனிப்படை போலீசார் அவர் கூறிய இடத்துக்கு நேற்று காலை 6.30 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர். சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்த சஞ்சய் ராஜா திடீரென்று ஒரு இடத்தில் நின்று விட்டார்.
போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு
உடனே போலீசார், அவரிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என்று கேட்டு உள்ளனர். அதற்கு அவர் ஒரு மரத்தின் அருகே உள்ள பகுதியை காட்டி, அங்கு இருக்கும் சிறிய கல்லுக்கு கீழ்தான் துப்பாக்கியை மறைத்து வைத்து உள்ளதாக கூறி உள்ளார். உடனே அந்த பகுதிக்கு போலீசார் அவரை அழைத்துச்சென்றனர்.
அப்போது அந்த கல்லை புரட்டிப்போட்டுவிட்டு அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த சஞ்சய் ராஜா, திடீரென்று அங்கு நின்று கொண்டு இருந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலாவை நோக்கி சுட்டார். ஆனால் அவர் மீது அந்த குண்டுபடவில்லை. இதனால் மீண்டும் அவர் மீது சுட்டார். ஆனால் அவர் விலகியதால் அந்த குண்டு அங்கு இருந்த மரத்தில் லேசாக உரசியபடி சென்றது.
காலில் துப்பாக்கியால் சுட்டார்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சஞ்சய் ராஜா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அங்கு நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், பாதுகாப்பு கருதி தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியை எடுத்து சஞ்சய் ராஜாவின் இடதுகால் முழங்காலுக்கு கீழ்ப்பகுதியில் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை கீழே போட்டார்.
உடனே போலீசார் சஞ்சய் ராஜாவை மடக்கி பிடித்தனர். மேலும் கீழே கிடந்த துப்பாக்கியையும், போலீசார் கைப்பற்றினார்கள். துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த சஞ்சய் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.