47 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 47 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
47 இடங்கள்
மேலும் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, மார்க்கெட் பிள்ளையார் கோவில் ஜங்ஷன், திருப்பாதிரிப்புலியூர் நாகம்மன் கோவில் ஜங்ஷன், சிதம்பரம் உட்கோட்டத்தில் தெற்கு சன்னதி தெரு, மேற்கு வீதி, விருத்தாசலம் கடைவீதி ஜங்ஷன் என மாவட்டம் முழுவதும் 47 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒலி பெருக்கி மூலமாக பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.