விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்
விழுப்புரம்
பாதுகாப்பு ஒத்திகை
இந்திய கப்பல் படை சார்பில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டு இந்த ஒத்திகை நேற்று தொடங்கியது.
சாகர் கவாச் எனப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகை விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளான மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இந்த ஒத்திகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோவிந்தராஜ், தேவராஜ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீசார் பலர் ஈடுபட்டனர்.
தீவிர கண்காணிப்பு
இவர்கள் படகில் சென்றவாறு கடலோர பகுதிகளின் வழியாக தீவிரவாதிகள் யாரேனும் வருகிறார்களா? என்று தொலைநோக்கி கருவி மூலம் தீவிரமாக கண்காணித்தனர். இவர்களுடன் கடலோர பாதுகாப்பு படையினரும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
மேலும் கடலோர கிராமங்களான கூனிமேடு, அனுமந்தை, தந்திராயன்குப்பம், அனிச்சங்குப்பம், சின்னமுதலியார்சாவடி, கீழ்பேட்டை, கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம், சோதனைக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் போலீசார் சாதாரண உடையில் சென்றவாறு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.