பெண் தவறவிட்ட நகை-பணத்தை மீட்டு ஒப்படைத்த போலீஸ்
முத்தாண்டிக்குப்பத்தில் பெண் தவறவிட்ட நகை-பணத்தை மீட்டு போலீசார் ஒப்படைத்தனர்.
கடலூர்,
முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள ஆத்திரிகுப்பத்தை சேர்ந்தவர் முருகவேல் மனைவி அஞ்சுலட்சுமி (வயது 50). இவர் நேற்று காலை முத்தாண்டிக்குப்பம் கடைவீதிக்கு காரில் சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கி கடைக்கு நடந்து சென்றபோது, 3 பவுன் நகை மற்றும் 2500 ரூபாய் வைத்திருந்த மணிபர்சை தவற விட்டுவிட்டார். இதில் பதறிய அவர், உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அஞ்சுலட்சுமி தவறவிட்ட மணிபர்சை, பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்த முருகன் (52) என்பவர் கீழே கிடந்து எடுத்தது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் முருகனிடம் விசாரித்ததில், அவர் கீழே கிடந்த மணிபர்சை எடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்த மணிபர்சை பறிமுதல் செய்த போலீசார், உடனே அதனை அஞ்சுலட்சுமியிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே பெண் தவற விட்ட மணிபர்சை, துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டினார்.