கஞ்சா வியாபாரிகள் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

வேலூரில் கஞ்சா வியாபாரிகள் வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Update: 2022-12-14 17:59 GMT

வேலூரில் கஞ்சா வியாபாரிகள் வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கஞ்சா விற்பனையை தடுக்க...

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபரேசன் 2.0 தொடங்கப்பட்டு மாநில மற்றும் மாவட்ட எல்லைகள், பஸ்நிலையங்களில் தீவிர சோதனை மற்றும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் மோட்டார் சைக்கிள், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் ரெயில்களில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டன. அதில், கஞ்சா கடத்திய நபர்கள், வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக்கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில் கஞ்சா விற்பனையை மேலும் தடுக்க ஆபரேசன் 3.0 தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளை கண்காணித்து அவர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

வியாபாரிகள் வீட்டில் சோதனை

அதன்பேரில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று தொரப்பாடி கே.கே.நகரில் வசிக்கும் கஞ்சா வியாபாரி ராஜேந்திரன் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று வீடு முழுவதும் சோதனையிட்டனர். இதேபோன்று பாகாயம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ஜானி, சின்ன அல்லாபுரத்தை சேர்ந்த கந்தசாமி ஆகியோர் வீட்டையும் போலீசார் சோதனை செய்தனர். இதில், வீட்டில் இருந்து போதைப்பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கஞ்சா விற்ற வழக்கில் ராஜேந்திரன் கைதாகி தற்போது சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் உள்பட 3 பேரின் வீடுகளில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. 3 பேரின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளை கண்காணித்து வருகிறோம். அவர்களின் வீடுகளையும் தேவைப்பட்டால் சோதனை செய்வோம். பாகாயம் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க இது போன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்