மாணவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க "போலீஸ் புரோ" திட்டம்

மாணவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க "போலீஸ் புரோ" திட்டம்

Update: 2023-07-28 19:30 GMT

கோவை

கோவையில் கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க "போலீஸ் புரோ" என்ற திட்டத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

"போலீஸ் புரோ" திட்டம்

போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்கும் நோக்கிலும் கோவை மாநகர போலீஸ் சார்பில் "போலீஸ் புரோ" என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்காக 52 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 45 சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு கல்லூரிக்கும் 2 வாரத்துக்கு ஒருமுறை சென்று அங்கு மாணவர்களிடம் யார்? யாரெல்லாம் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளார்கள் என்பதை சகோதரரைப்போல் பேசி கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி அதில் இருந்து மீட்க நடவடிக்கை எடுப்பார்கள். அத்துடன் கல்லூரி மாணவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினைகள், குறைகள் இருந்தாலும் அவற்றை கேட்டறிந்து தீர்வு காண்பார்கள்.

அறிமுகம்

புரோ என்ற சொல் தற்போதைய நாகரீக காலத்தில் வழக்கு சொல்லாக மாறி உள்ளது. இதனால் மாணவா்களுக்கு இந்த திட்டம் எளிதில் சென்றடையும் என்பதால் தான் மாநகர போலீஸ் சார்பில் "போலீஸ் புரோ" என்ற பெயரில் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். "போலீஸ் புரோ" திட்டம் தொடக்க விழா கோவை நவ இந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர். அரங்கில் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் முதல்வர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றார். விழாவுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி "போலீஸ் புரோ" திட்டத்தை தொடங்கிவைத்து போலீஸ் புரோ இலட்சினையை அறிமுகம் செய்து பேசியதாவது:-

கருணையுடன் கண்டிப்பு

கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்புக்காக போலீஸ் அக்கா என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதன்தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்தில் இருந்து பாதுகாக்கவும், அவர்களின் எதிர்காலத்தை சரிசெய்யவும் தான் "போலீஸ் புரோ" என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் இடையே போதை பழக்கம் இருப்பது தெரியவந்தால் பேராசிரியர்கள், மாணவர்களை கருணையுடன் கண்டிக்க வேண்டும்.

மாணவர்கள் கூரியர் மூலமாக எந்த பொருள் வாங்கினாலும், அந்த பொருள் என்ன? என்பது பற்றி, சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணவர்களிடம் சகோதரராக பேசி தகவலை சேகரிக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம். இதற்காக கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் சப்ளை செய்பவர்களை சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்டு பிடிக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நடவடிக்கை

கல்லூரியில் ஒரு மாணவர் போதை பொருள் பயன்படுத்துவது தெரியவந்தால் அவரின் நடவடிக்கையை கல்லூரிக்கு வரும் சப்-இன்ஸ்பெக்டரை சகோதரராக நினைத்து அவரிடம் தனிப்பட்டமுறையில் மாணவா்கள் தெரிவிக்கலாம். போதை பொருட்கள் பயன்படுத்தினால் உரிய ஆலோசனை வழங்கி அதில் இருந்து மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்று மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க கல்லூரி காவலாளிகள், விடுதி வார்டன்களை தகவல் கூறுபவர்களாகவும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் 2 வாரத்துக்கு ஒரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று அங்கு உள்ள மாணவர்களை சந்தித்து போதை பொருட்கள் தொடர்பாகவும், வேறு ஏதாவது பிரச்சினை இருந்தாலும் அவர்களிடம் கேட்டு அதற்கு உரிய தீர்வு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஷ்வரன் நன்றி கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்