கடலூர் அருகே மீனவர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கடலூர் அருகே மீனவர் வீட்டில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-10 20:18 GMT

கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வீரப்பிள்ளை, மீனவர். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 55). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை படிக்கட்டுக்கு கீழே வைத்து விட்டு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். தொடர்ந்து படிக்கட்டின் கீழ் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, 9 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.

நகை-பணம் கொள்ளை

கலைச்செல்வி வீட்டின் கதவை பூட்டி சாவியை படிக்கட்டுக்கு கீழ் வைத்து சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அந்த சாவியை எடுத்துள்ளனர். பின்னர் கதவை திறந்து பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்