பண்ருட்டி அருகே அய்யனார் கோவிலில் 4 கோபுர கலசங்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பண்ருட்டி அருகே திருவதிகை அய்யனார் கோவிலில் விமான கலசங்கள் மற்றும் பூஜை பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-16 18:45 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் அணைக்கட்டு ஏமாத்தி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் பூசாரி செல்வம் கோவில் கதவுகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

பின்னர் நேற்று காலை பூஜைக்காக வந்த பூசாரி கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பூஜைக்கு பயன்படுத்தப்படும் பித்தளை மணி, மின்சார ஒயர் ஆகியவற்றை காணவில்லை.

மர்ம நபர்கள் கைவரிசை

மேலும் அய்யனார் கோவில் விமானத்தில் இருந்த ஒரு கலசம், அருகில் உள்ள கன்னிமார் கோவில் விமானத்தில் இருந்த 3 கோபுர கலசங்கள் என மொத்தம் 4 கலசங்களை காணவில்லை. இரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் கோவிலின் உள்ளே புகுந்து பூஜைபொருட்கள் மற்றும் கோபுர கலசங்களை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து கோவில் தர்மகர்த்தாவும், முன்னாள் கவுன்சிலருமான கோவிந்தன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து பூஜை பொருட்கள் மற்றும் விமான கலசங்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்