கடலூர் எம்எல்ஏ பங்கேற்ற விழாவில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரிடம் போலீசார் விசாரணை
கடலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பங்கேற்ற விழாவில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெட்டிச்சாவடி,
கடலூர் அருகே உள்ள நல்லாத்தூரை சேர்ந்தவர் மணிவண்ணன், தி.மு.க. நிர்வாகி. இவரது மகள் மஞ்சள் நீராட்டு விழா நேற்று முன்தினம் இரவு நல்லாத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சி நிர்வாகிகளுடன் சென்றிருந்தார்.
அந்த சமயத்தில் மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே மர்மநபர்கள், பெட்ரோல் குண்டு வீசினர். உடனே அய்யப்பன் எம்.எல்.ஏ. அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
5 தனிப்படை அமைப்பு
இதுகுறித்து மணிவண்ணன், தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே குண்டு வீசியவர்களை பிடிக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் நல்லாத்தூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
2 பேரிடம் விசாரணை
இதில் சந்தேகத்திற்கிடமான வகையில் நல்லாத்தூர் பகுதியில் சுற்றித்திரிந்ததாக புதுச்சேரியை சேர்ந்த ஒருவரையும், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒருவரையும் பிடித்து, எம்.எல்.ஏ.வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள அய்யப்பன் எம்.எல்.ஏ. வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.