கிணத்துக்கடவில் போலீசார் தீவிர வாகன சோதனை

கோவையில் கார் வெடித்து ஒருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, கிணத்துக்கடவில் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Update: 2022-10-23 18:45 GMT

கிணத்துக்கடவு, 

கோவையில் கார் வெடித்து ஒருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, கிணத்துக்கடவில் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

வாகன சோதனை

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று அதிகாலை கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்ததில் மர்ம ஆசாமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கார் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் இரும்பு தடுப்புகள் வைத்து, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகனம் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர்.

விவரங்கள் சேகரிப்பு

மேலும் வாகனங்களில் வரும் நபர்களின் பெயர் மற்றும் வாகனங்களின் பதிவு எண்களை போலீசார் குறித்து கொண்டனர். காரில் வந்தவர்களிடம் எங்கு செல்கிறீர்கள், எத்தனை பேர் காரில் உள்ளனர் என கேட்டு விவரங்களை சேகரித்து, காரை சோதனையிட்ட பின்னர் போலீசார் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். இதைதொடர்ந்து கிணத்துக்கடவு பகுதியில் நீண்ட நாட்களாக வாகனங்கள் எதுவும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், ரெயில் நிலையம் மற்றும் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆர்.எஸ் ரோடு ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழக-கேரள எல்லையான வீரப்ப கவுண்டனூர் சோதனைச்சாவடி, கிணத்துக்கடவு அருகே உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்