போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி 2-வது முறையாக தற்கொலை முயற்சி

வாலிபர் தற்கொலை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி 2-வது முறையாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-01-02 18:45 GMT

விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள சூரப்பட்டை சேர்ந்தவர் மரியநாதன் மகன் ராஜா (வயது 22). இவர் கடந்த 23-ந் தேதி இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணமான அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி, மோகன் ஆகியோரை கைது செய்யக்கோரி ராஜாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி, மோகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனிடையே ராஜா தற்கொலை சம்பவத்தில் திருப்பமாக விழுப்புரத்தை சேர்ந்த அனன்யா என்ற திருநங்கை கடந்த 25-ந் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராஜாவும், அனன்யாவும் காதலித்து வந்த விவகாரம் ராஜாவின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்ததால் ராஜா தற்கொலை செய்துகொண்டதாகவும், இதனால் மனமுடைந்த அனன்யா தற்கொலைக்கு முயன்றதாகவும் சக திருநங்கைகள் புகார் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

இந்நிலையில் வாலிபர் ராஜா தற்கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமலும், மெத்தனமாக செயல்பட்டதாகவும் கூறி கெடார் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சுதா ஆகிய இருவரையும் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்து போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையறிந்ததும் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரின் மனைவியும் வக்கீலுமான சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது உயர் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கையால் தனது கணவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியவாறு தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

மீண்டும் தற்கொலை முயற்சி

இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரின் மனைவி சரஸ்வதி மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதாக தெரிகிறது. இதில் மயங்கிய நிலையில் இருந்த அவரை உடனடியாக விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காசநோய்க்கு உட்கொள்ளும் மாத்திரைகளில் 40 மாத்திரைகள் கொண்ட அட்டை அவரது வீட்டில் தீர்ந்திருந்ததால் அனைத்து மாத்திரைகளையும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நியாயம் கேட்டு அவரது மனைவி 2-வது முறையாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தாவது கணவருக்கு நியாயம் கிடைக்கச்செய்வேன்

மு்ன்னதாக இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரின் மனைவியான வக்கீல் சரஸ்வதி நேற்று காலை அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தனது கணவரின் செல்போனில் இருந்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஆகியோருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், "உயர் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கையால் எனது கணவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நான் இறந்தாவது எனது கணவருக்கு நியாயம் கிடைக்கச்செய்வேன், நான் இறந்தால் எனது இறப்புக்கு உயர் அதிகாரிகள், என் கணவருக்கும், பிள்ளைகளுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் வக்கீல் சரஸ்வதி, தான் சார்ந்திருக்கும் வக்கீல் சங்கத்தினர் சிலருக்கும் தனது செல்போன் மூலமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரும், தன் மீது உயர் அதிகாரிகள் எடுத்துள்ள துறை ரீதியான நடவடிக்கை தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு மனு அனுப்பியுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்