சென்டிரல் ரெயில் நிலையத்தில் காதலியுடன் சேர்ந்து செல்போன் திருடிய வாலிபர் - போலீசார் மடக்கி பிடித்தனர்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் காதலியுடன் சேர்ந்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

Update: 2022-06-19 02:37 GMT

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த 16-ந்தேதி பயணிகள் காத்திருப்பு அறையில் இருந்த பயணி ஒருவரிடம் இருந்து செல்போன் திருடப்பட்டது. இது தொடர்பாக ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ பதிவுகள் மூலம் செல்போன் திருடனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த செல்போன் திருடன் மீண்டும் தன் கைவரிசையை காட்டுவதற்கு சென்டிரல் ரெயில் நிலையம் வந்ததை கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஏட்டு பாண்டியன் கவனித்தார். இதையடுத்து அவர் உடனடியாக இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையிலான ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து செயல்பட்ட போலீசார் செல்போன் திருடனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதை தொடர்ந்து அவனிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், பெண் ஒருவர் ரெயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. இதைக்கண்ட போலீசார், அந்த பெண்ணையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் செல்போன் திருடன் திருவொற்றியூரை சேர்ந்த பார்த்திபன் (வயது 22) என்பதும், அந்த பெண் ஆவடியை சேர்ந்த ஜெயசிரி (21) என்பதும், அவர் தனது காதலனான பார்த்திபனுடன் இணைந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்