ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஊட்டி
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளன. தொடர்ந்து இந்து முன்னணி சார்பில், ஊட்டியில் 20-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தலைகுந்தா அருகே உள்ள காமராஜ் சாகர் அணையில் கரைக்கப்படுகிறது.
இதேபோல் அனுமன் சேனா, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், 21-ந் தேதி விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காமராஜ் சாகர் அணையில் கரைக்கப்பட உள்ளது.
கொடி அணிவகுப்பு
இந்தநிலையில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது, எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையம் முன்பு இருந்து போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதனை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தொடங்கி வைத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் யசோதா, விஜயலட்சுமி உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபி ஹவுஸ், மாரியம்மன் கோவில் சந்திப்பு, மெயின் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையம் வரை நடந்தது. தொடர்ந்து ஊட்டி காந்தல் பகுதியிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
1,000 போலீசார் பாதுகாப்பு
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
ஊட்டி சுற்றுலா நகரமாக உள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஊட்டியில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில் போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட 1,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதேபோல் குன்னூர், கூடலூர் பகுதிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொடி அணிவகுப்பு நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ள இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.