சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தரகரின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு
சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தரகரின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தரகரின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கருமுட்டை விற்பனை
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் சிறுமியின் தாயார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 4 தனியார் மருத்துவமனைகளில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப்பட்டது தெரியவந்ததன் பேரில் அவர்களிடம் போலீசாரும், மருத்துவ உயர்மட்ட குழுவினரும் விசாரணை நடத்தினர்.
சம்மன்
அதுமட்டுமின்றி பெருந்துறை மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், ஓசூர் மருத்துவமனையில் இருந்து திருப்பதிக்கும் சிறுமி அனுப்பி வைக்கப்பட்டு கருமுட்டை எடுக்கப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து அந்த மருத்துவமனைகளுக்கும் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதன்பேரில் நேற்று முன்தினம் சேலம் மற்றும் ஓசூர் மருத்துவமனை நிர்வாகிகளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் இருந்து கருமுட்டை எடுப்பதற்காக திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டதும் தெரியவந்தது.
வங்கி கணக்கு ஆய்வு
இதனால் திருச்சி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்களிடமும் ஈரோடு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கூடுதல் ஆவணங்களுடன் விசாரணைக்கு வருமாறும் அவர்களுக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இதற்கிடையே கைதான ஈரோடு கைகாட்டிவலசு திருவள்ளுவர் நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மனைவி தரகர் மாலதியின் 2 வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதிர்ச்சி தகவல்
இதில், மருத்துவமனைகளின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு நாட்களில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் தரகரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த அதிர்ச்சி தகவலால் போலீசார் இந்த வழக்கின் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர் புகார் அளித்த சிறுமி மட்டுமன்றி மேலும் பல சிறுமிகள் மற்றும் பெண்களிடம் கருமுட்டை தானம் என்ற பெயரில் தரகர் மாலதி, மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கருமுட்டை விற்பனை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.