ஆலாந்துறை பகுதியில் போலீசார் வீடு, வீடாக சோதனை
கோவை ஆலாந்துறை பகுதிகளில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்கி உள்ளனரா? என்று போலீசார் வீடு, வீடாக சோதனை நடத்தினார்கள்.
கோவை
கோவை ஆலாந்துறை பகுதிகளில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்கி உள்ளனரா? என்று போலீசார் வீடு, வீடாக சோதனை நடத்தினார்கள்.
வெளிநாட்டினர் பதுங்கல்
பேரூர் அருகே உள்ள ஆலாந்துறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதுகளில் விசா காலாவதியான நிலையிலும் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்கி இருப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
ஆலாந்துறை, போளுவாம்பட்டி, செம்மேடு, மத்வராயபுரம், காருண்யாநகர் மற்றும் பழங்குடியின கிராமங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் வீடு, வீடாக சோதனை நடத்தினார்கள்.
10 குழுக்கள்
சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒவ்வொரு குழுவிலும் 10 போலீசாருடன் இந்த சோதனை நடைபெற்றது. 50 பெண் போலீசார் உள்பட 100 போலீசார் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினார்கள்.
மேலும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் யாராவது வந்தால் அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறும் தகவல் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரின் நேற்றைய சோதனையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டுக்காரர்கள் கண்டறியப்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.