மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பம் ஆக்கியவர்கள் மீது போலீசில் புகார்
வாணியம்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பம் ஆக்கியவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனால், விசாரணைக்கு பயந்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பம் ஆக்கியவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனால், விசாரணைக்கு பயந்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது தந்தை 100 நாள் வேலைக்கு சென்று விடுவார். மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். சில நாட்கள் காட்டுப்பகுதிக்கு ஆடு மேய்க்க செல்வார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த விவசாயிகள் மாணிக்கம் (வயது 52) மற்றும் கோவிந்தன் (60) ஆகியோர் அந்த பெண்ணிடம் பேசி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
பாலியல் பலாத்காரம்
பின்னர் தனியாக இருந்த பெண்ணை இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தபோது கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரித்த போது மாணிக்கம், கோவிந்தன் ஆகியோர் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.
போலீசில் புகார்
இதையடுத்து பெண்ணின் தந்தை வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 5-ந் தேதி புகார் செய்தார். அதன்பேரில் மாணிக்கம், கோவிந்தன் ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே இந்த விஷயம் ஊர் பிரமுகர்களுக்கு தெரிந்தது. இதனைத்தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், இதுசம்பந்தமாக ஊரில் பஞ்சாயத்து பேசி அதற்கு நல்ல தீர்வை காண்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் இன்ஸ்பெக்டர் ஊர் பிரமுகர்களிடம் பேசி வரும்படி பெண்ணின் தந்தையை அனுப்பி உள்ளார்.
பின்னர் மாணிக்கம், கோவிந்தன் இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்க வேண்டும் என ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர்.
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
இந்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் மற்றும் ஊரில் அபராதம் விதித்தது என்ற மனவேதனையில் நேற்று முன்தினம் முழுவதும் மாணிக்கம் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை நெக்குந்தி என்ற இடத்தில் சென்னையில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் முன்பு பாய்ந்து மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவல் சமூகவலை தளங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேற்று மாலை வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து விடுவிப்பு
அப்போது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். இதில் மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டதால், கோவிந்தன் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்ஸ்பெக்டர் சாந்தி இந்த வழக்கில் மெத்தனமாக நடந்து கொண்டதை தொடர்ந்து அவர் உடனடியாக மகளிர் போலீஸ் நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பொறுப்பு அதிகாரியாக நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலரை வேலூர் சரக டி.ஐ.ஜி. நியமித்தார்.
அதனைத்தொடர்ந்து உடனடியாக இந்த வழக்கு தொடர்பாக மலர் விசாரணை நடத்தி வருகிறார்.