வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் கமிஷனர் கலந்துரையாடல்
வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் கமிஷனர் கலந்துரையாடினார்.
வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் கமிஷனர் கலந்துரையாடினார்.
கலந்துரையாடல்
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த 250 தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா நேற்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் அவர்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்தார். பின்பு தொழிலாளருக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் தொழிலாளருக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வெளிமாநில தொழிலாளர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமை தாங்கினார். லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் முன்னிலை வகித்தார். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வரவேற்றார்.
சமயபுரம், சிறுகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பணி புரியும் பீகார், ஒடிசா, மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, நாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தினர்.
மணப்பாறை
இதேபோல் மணப்பாறை அருகே ஆலத்தூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநில பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுஜித் குமார் நேரில் சந்தித்தார். அப்போது சமூக வலை தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பதுடன் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வோம். யாரும் எதற்காகவும் அச்சப்பட தேவை இல்லை, எந்த பாதிப்பாக இருந்தாலும் உடனே டோல் பிரீ எண்ணை அழையுங்கள் என்று கூறினார். அனைவரும் வடமாநில தொழிலாளர்கள் என்பதால் அனைவருக்கும் போலீசார் ஏற்படுத்தும் விழிப்புணர்வு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் இந்தியில் பேசினார்.