20 இடங்களில் போலீசார் வாகன சோதனை

நெல்லை மாநகர பகுதியில் நேற்று 20 இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2023-03-11 18:49 GMT

நெல்லை மாநகர பகுதியில் நேற்று 20 இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

20 இடங்களில் வாகன சோதனை

நெல்லை மாநகர பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

வாகனங்களில் விதிகளுக்கு புறம்பாக நம்பர் பிளேட் மாட்டுதல், மோட்டார் சைக்கிள் சாகசங்கள், ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மாநகர பகுதி முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து துறை மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளுக்கு புறம்பாக நம்பர் பிளேட் மாட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

துணை கமிஷனர் ஆய்வு

முதல் முறையாக பிடிபடுபவர்களுக்கு ரூ.500-ம், 2-வது முறையாக அதே குற்றத்தை செய்தவர்களுக்கு ரூ.1,500-ம் அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை வண்ணார்பேட்டையில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை துணை கமிஷனர் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

அப்போது விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட் மாட்டி வந்தவர்களிடம் உடனடியாக அதனை மாற்றுமாறு எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள கடைகளுக்கு சென்று அவர்கள் நம்பர் பிளேட்டை மாற்றி துணை கமிஷனரிடம் அதனை காட்டி விட்டு சென்றனர். தொடர்ந்து நெல்லையில் உள்ள வாகன ஷோரூம்களுக்கு சென்ற போலீசார் விதிமுறைகளை பின்பற்றி நம்பர் பிளேட் வழங்குமாறும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்