அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
கோவையில் தியேட்டரில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கதவுகள் உடைந்தன. இதனால் அஜித் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி துரத்தினார்கள். இதில் 20 பேர் லேசான காயமடைந்தனர்.
கோவை
கோவையில் தியேட்டரில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கதவுகள் உடைந்தன. இதனால் அஜித் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி துரத்தினார்கள். இதில் 20 பேர் லேசான காயமடைந்தனர்.
அஜித், விஜய் படம் வெளியானது
பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. சில தியேட்டர்களில் அதிகாலையிலேயே படங்கள் திரையிடப்பட்டன. இதனால் அந்த தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் நள்ளிரவு முதலே குவிந்தனர்.
இதன் காரணமாக பெரும்பாலான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்து இருந்தது. இதனால் அந்தந்த தியேட்டர்கள் சார்பில் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் ரசிகர்கள் அத்துமீறி உள்ளே வராதபடி கண்காணித்தபடி இருந்தனர்.
கற்பூரம் ஏற்றி மகிழ்ந்தனர்
சில தியேட்டர்களில் வைக்கப்பட்டு இருந்த கட்-அவுட்டுகளுக்கு ரசிகர்கள் கற்பூரம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும் மகிழ்ந்தனர். அதிகாலையில் ரசிகர்களுக்கு பிரத்யேகமான காட்சி வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் இந்த 2 படங்களையும் பார்த்து மகிழ்ந்ததுடன், பட்டாசு வெடித்து உற்சாகத்தில் திளைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அந்த தியேட்டரில் அதிகாலை 1 மணிக்குதான் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்
இருந்தபோதிலும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் 11 மணிக்கு அந்த தியேட்டருக்குள் செல்ல முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த பவுன்சர்கள், ரசிகர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக ரசிகர்கள் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் பாதுகாப்புக்காக நின்றிருந்த பவுன்சர்கள் செய்வதறியாமல் திகைத்ததுடன், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் உள்ளே புகுந்த ரசிகர்கள் அங்கு போடப்பட்டு இருந்த கண்ணாடி கதவை உடைத்து திரையரங்குக்குள் நுழைந்தனர்.
போலீஸ் தடியடி
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் ரசிகர்களை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் செல்லவில்லை. அத்துடன் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதன் காரணமாக ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் தவறி கீழே விழுந்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த தியேட்டர் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்த தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.