வழிப்பறியில் ஈடுபட்டவர்களை சில மணி நேரங்களில் பிடித்த போலீசார்
கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை சில மணி நேரங்களில் பிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை சில மணி நேரங்களில் பிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வழிப்பறி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கிழக்கு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் 3 பேர், சுமை தூக்கும் தொழிலாளர் ஒருவரிடமும், பெண் ஒருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடினர்.
இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் உத்தரவுப்படி, கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்திவாசன், செல்வகுமார், தலைமை ஏட்டு பாலசுப்பிரமணியம் மற்றும் நாடிமுத்து, ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி சென்ற வழிப்பறி திருடர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
3 பேர் பிடிபட்டனர்
இதுதொடர்பாக கும்பகோணம் பெசண்ட் ரோடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜேஷ் கண்ணன் (வயது23), பாலக்கரை பெருமாண்டி தெருவை சேர்ந்த பூபதி மகன் மகேந்திரன் (23), சத்திரம் கருப்பூர் புதுத்தெருவை சேர்ந்த ஏசுராஜ் மகன் பிரசாந்த் (23) ஆகிய 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் 3 பேரும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் ராஜேஷ் கண்ணன் கடந்த 26-ந் தேதி மாலை கும்பகோணம் கிளை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாச்சியார் கோவில் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு வந்து மேற்படி வழிப்பறியில் ஈடுபட்டது போலீசருக்கு தெரிய வந்தது.
சில மணிநேரங்களில்...
மேலும் வழிபறியில் ஈடுபட்ட வாலிபர்கள் 3 பேர் மீதும் கும்பகோணம், தஞ்சாவூர் போலீஸ் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வழிப்பறி செய்த பணம், கைப்பை, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழிப்பறி நடந்த சில மணி நேரங்களில் அதில் தொடர்புடையவர்களை மடக்கிப்பிடித்த போலீசாருக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.