குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கோவிலில் கிடாவெட்டி போலீசார் வழிபாடு

வடமதுரை அருகே குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கோவிலில் கிடாவெட்டி போலீசார் வழிபாடு நடத்தினர்.

Update: 2023-01-02 17:03 GMT

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலூரில் பிரசித்திபெற்ற வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் புதிதாக வாகனம் வாங்குவோர் தங்களது வாகனங்களை இந்த கோவிலுக்கு கொண்டுவந்து வழிபாடு செய்துவிட்டு பயன்படுத்த தொடங்குவார்கள். இதேபோல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், இந்த கோவிலில் வழிபாடு செய்துவிட்டு தங்களது பயணத்தை தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் வடமதுரை போலீசார் நேற்று முன்தினம் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் வழிபாடு நடத்தினர். இதில், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார், குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார், அவர்களின் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.

2023-ம் ஆண்டில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும், கொலை, கொள்ளை, விபத்து மற்றும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டியும் போலீசார் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். முடிவில் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்