உரிகம் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை ஊசியால் குத்த முயன்ற வாலிபரால் பரபரப்பு-போலீசார் விசாரணை

Update: 2022-11-08 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

உரிகம் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை ஊசியால் குத்த முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தலைமை ஆசிரியர்

அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட உரிகம் அருகே உள்ள பீர்னப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 40 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாகேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ராஜேந்திரன் (வயது 34) என்பவர் விண்ணப்பித்துள்ளார்.

ராஜேந்திரன் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் நாகேந்திரன் விசாரித்தபோது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சிலர் கூறியுள்ளனர். இதனிடையே பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக பேசி உள்ளார். அப்போது நாகேந்திரன், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறியதாக தெரிகிறது. இந்த தகவல் ராஜேந்திரனுக்கு சென்றது.

ஊசியால் குத்த முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த அவர், நேற்று அரசு பள்ளிக்கு சென்று, நாகேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த பெரிய ஊசியை எடுத்து அதில் மருந்தை நிரப்பினார். பின்னர் அவர், தலைமை ஆசிரியர் நாகேந்திரனை ஊசியால் குத்த முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகேந்திரன் மற்றும் மாணவ-மாணவிகள் அங்கிருந்து அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். மேலும் நாகேந்திரனை துரத்தி சென்ற வாலிபர் ராஜேந்திரனை பிடித்து அஞ்செட்டி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாகேந்திரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் எழுதி பெற்று கொண்டு, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்