போலீசாருக்கு டி.ஜி.பி. பரிசு வழங்கி பாராட்டு
போலீசாருக்கு டி.ஜி.பி. பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் தேவர் நினைவிடத்தில் நாளை (30-ந் தேதி) காலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நேரில் அஞ்சலி செலுத்துகிறார். இதையொட்டி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று கமுதி பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் குற்ற செயல்களில் சிறப்பாக பணியாற்றி துப்பு துலக்கிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை பாராட்டி ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதன்படி ராமநாதபுரத்தில் கடந்த மாதம் பா.ஜ.க. ஆதரவாளரான டாக்டர் மனோஜ் குமாரின் கார் தீவைக்கப்பட்ட சம்பவத்தில் உடனடியாக துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்ததுடன் குற்ற பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இது தவிர ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் அலுவலக தனிப்பிரிவு ஆய்வாளர் சரவணபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், ரமேஷ், சைபர் கிரைம் சப் -இன்ஸ்பெக்டர் திபாகர், பரமக்குடி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல், ஏட்டு புகழேந்தி உள்ளிட்டோருக்கும் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க்,ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.