மது போதையில் வாகனம் ஓட்டினால் குற்றவியல் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி எச்சரிக்கை

Update: 2022-10-22 18:45 GMT

நாமக்கல்:

தமிழகத்தை பொறுத்த வரையில் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் அபராதம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலும் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இந்த ஆண்டு இதுவரை ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், கண்கூசும் விளக்கு பொருத்தி இருந்தது என்பன உள்பட போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக 16,684 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மது போதையில் வாகனம் ஓட்டியதாக 1,051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு விபத்து மரணம் சற்று குறைந்து உள்ளது. ஆனால் கடந்த ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் போக்குவரத்து இன்றி இருந்தது. அதை ஒப்பிடும் போது இந்த ஆண்டில் நாம் எடுத்த பல்வேறு நடவடிக்கையால் விபத்துகள் வெகுவாக குறைந்து உள்ளது என்றே கூற வேண்டும்.

அதிக அளவில் விபத்துகளுக்கு சாலை வடிவமைப்பு, அதி வேகமாக வாகனங்களை ஓட்டுதல் போன்றவையும் காரணமாக இருந்து வருகிறது. எனவே சாலைபாதுகாப்பு கூட்டத்தில் அது தொடர்பாக விவாதித்து தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. மது போதையில் வாகனம் ஓட்டினால் தற்போது 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. புதிய சட்ட திருத்தத்தின்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதில் சட்டம் சொல்வதைதான் நாங்கள் செய்வோம். மது போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கூறினார்.

மேலும் செய்திகள்