பெரிய மணலியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் சாலை மறியலால் பரபரப்பு போலீசார் பேச்சுவார்த்தை
பெரிய மணலியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் சாலை மறியலால் பரபரப்பு போலீசார் பேச்சுவார்த்தை
எலச்சிபாளையம்:
பெரிய மணலியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனுமதி பெறவில்லை
திருச்செங்கோடு அருகே பெரிய மணலி 4 ரோடு பகுதியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் அருந்ததியர் சமூக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவர்களை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெறவில்லை என தெரிகிறது.
இதையொட்டி ஆதித்தமிழர் கட்சியினர் மத்திய மாவட்ட செயலாளர் மணல்மேடு கோபி, ஈரோடு வடக்கு மாவட்ட வேங்கை பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் திரண்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற எலச்சிபாளையம் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்றும், எனவே கலைந்து செல்லுமாறும் கூறினர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் ஆதித்தமிழர் கட்சியினர் அங்குள்ள சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாணவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.