கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் பெரம்பலூரில் 18-ந்தேதி நடக்கிறது.
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 18-ந்தேதி கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலை பள்ளியில் வருகிற 18-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரி முதல்வரை அணுகி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து முதல்வரின் கையொப்பம் பெற்று கல்லூரி மூலமாக adtamildept@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு வருகை புரிந்து போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும்.
ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 போட்டிகளுக்கும் 3 மாணவ-மாணவிகளை மட்டும் ஒரு கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் படி கல்லூரி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும் மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மாநில போட்டிகள் தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த வாய்ப்பினைக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.