திருமண ஆசை வார்த்தை கூறி 7-ம் வகுப்பு மாணவியை கடத்திய 16 வயது சிறுவன் போக்சோவில் கைது

திருமண ஆசை வார்த்தை கூறி 7-ம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்ற 16 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.

Update: 2022-06-03 20:41 GMT

அந்தியூர்

திருமண ஆசை வார்த்தை கூறி 7-ம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்ற 16 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.

7-ம் வகுப்பு மாணவி

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பகுதியை சேர்ந்த செங்கல்சூளை தொழிலாளி ஒருவரின் மகள் அந்தியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த மாணவி சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் தந்தையும், தாயும் பல்வேறு இடங்களில் ேதடிப்பார்த்தார்கள். ஆனால் மாணவியை காணவில்லை.

16 வயது சிறுவன்

இதுகுறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என்றும், கண்டு பிடித்து தருமாறும் பெற்றோர் புகார் அளித்தார்கள். அதன்பேரில் போலீசார் மாணவியை தேடி வந்தார்கள்.

இந்தநிலையில் மாணவியை 16 வயது சிறுவன் ஒருவன் கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் அந்தியூர் பட்லூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்குக்கு வேலைக்கு வந்துள்ளான். பஸ்சில் தினமும் வந்து சென்றபோது, அந்தியூர் பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவியுடன் சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

போக்சோவில் கைது

இதைத்தொடர்ந்து சிறுவன் திருமணம் செய்துகொள்வதாக மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை கடத்திச்சென்றான். எடப்பாடியில் இருந்து திருப்பூருக்கு மாணவியுடன் செல்ல முயன்றபோது, அந்தியூர் பஸ்நிலையத்தில் சிறுவனை போலீசார் பிடித்தார்கள். பின்னர் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள். மேலும் மாணவியை கடத்தி சென்றதாக சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு சென்றார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்