பா.ம.க. நிர்வாகியின் மனைவி வெட்டிக் கொலை; 3 பேர் கைது

ஆதிச்சநல்லூரில் பா.ம.க. நிர்வாகியின் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-08 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஆதிச்சநல்லூரில் பா.ம.க. நிர்வாகியின் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பா.ம.க. நிர்வாகியின் மனைவி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). இவர் பா.ம.க. ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது மனைவி பொன்னம்மாள் (45).

அதே பகுதியைச் சேர்ந்த மூக்கத்தேவர் மகன் இசக்கிபாண்டி (37). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மதுபோதையில் பொன்னம்மாளிடம் தகராறு செய்தார். இதில் இசக்கிபாண்டிக்கு ஆதரவாக அவரது பெற்றோர் மூக்கத்தேவர், பிச்சம்மாள் ஆகியோர் செயல்பட்டனர்.

வெட்டிக்கொலை

தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அருகில் கிடந்த கட்டையால் பொன்னம்மாளை தாக்கினர். மேலும், இசக்கிபாண்டி அரிவாளால் பொன்னம்மாளை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். அக்கம்பக்கத்தினர் பொன்னம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார், துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இசக்கிபாண்டி, மூக்கத்தேவர், பிச்சம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

வீடு சூறை

இதற்கிடையே, இசக்கிபாண்டி வீட்டை பொன்னம்மாளின் உறவினர்கள் அடித்து நொறுக்கி சூறையாடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஆதிச்சநல்லூரில் பா.ம.க. நிர்வாகியின் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்