பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்-திருச்சியில் முத்தரசன் பேட்டி

மணிப்பூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2023-07-24 19:24 GMT

மணிப்பூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

மணிப்பூர் சம்பவம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மணிப்பூரில் 3 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை தடுக்க மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பா.ஜனதா வெற்றி பெற்றார்கள். அதுபோல நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

ஜனாதிபதி ஆட்சி

பா.ஜனதா ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் என்பது இருக்காது. அதனால் தான் ஜனநாயகத்தை காக்கும் வகையில் அனைத்து மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் விவாதிக்க முன்வரவில்லை. எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் செய்யவில்லை. பிரதமர் தான் நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கிறார். மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்தி, அந்த மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி சுமுக நிலை எட்டப்பட வேண்டும்.

பதவி விலக வேண்டும்

மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடுமுழுவதும் நாளை (இன்று) போராட்டம் நடைபெற உள்ளது. மணிப்பூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும். கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் வேங்கைவயல் பிரச்சினை தொடர்பாக குரல் கொடுத்து போராட்டம் நடத்தினோம். பா.ஜனதாவை தவிர மற்ற எல்லோரும் வேங்கைவயல் பிரச்சினையை பற்றி பேசியுள்ளார்கள். சமூக விரோதிகளின் புகலிடமாக பா.ஜனதா உள்ளது. பா.ஜனதாவில் உள்ள சமூக விரோதிகளை கட்டுப்படுத்தினாலே அமைதி நிலவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்