பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-09 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் வருகிற 15-ந் தேதிக்குள், தங்களது விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பி.எம்.கிசான் திட்டம்

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடு பொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 72 ஆயிரத்து 475 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகள் திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து விவசாயிகளுக்கு 13 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வது பி.எம்.கிசான் திட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அல்லது விவசாயியை தெரிந்து கொள்ளுங்கள் (இ-கே.ஒய்.சி) என்ற முறையில் ஆன்லைனில் விவசாயிகள் விவரங்களை 3 வழிகளில் பதிவு செய்யலாம்.

ஆன்லைன் பதிவு

அதன்படி முதல் வழிமுறையாக, தங்களது ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைத்து உள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட இணையதளமானwww.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை பதிவு செய்து ஒ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்யலாம். இரண்டாம் வழிமுறை ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ.சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்ப்பு செய்யலாம். அதற்கான கட்டணமாக ரூ.15 பொது சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும். மூன்றாவது வழிமுறை பி.எம்.கிசான் செயலி மூலமாக முகஅடையாளம் கொண்டு இ-கே.ஒய்.சி செய்யலாம். மேலும் அருகில் உள்ள இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியை அணுகி ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகள் வருகிற 15-ந் தேதிக்குள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்