பி.எம். கிசான் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க 30-ந்தேதி கடைசி நாள்

பி.எம். கிசான் பயனாளிகள் தவணை தொகையினை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க 30-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-11-27 13:23 GMT

பி.எம். கிசான் பயனாளிகள் தவணை தொகையினை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க 30-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

பிரதம மந்திரி கிசான் திட்டம்

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவி தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் என 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் 13-வது தவணையாக அதாவது வருகிற டிசம்பர் மாதம் முதல் மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணை தொகை பி.எம். கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை இணைத்து 30-ந்தேதிக்குள் (புதன்கிழமை) உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை பின்வரும் முறைகளில் இணைத்து கொள்ளலாம்.

உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கேட்டால் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம். கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம்.

ஆதார் எண்

அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்கலாம். உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி http://pmkissan.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 52 ஆயிரத்து 196 விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் 30-ந்தேதிக்குள் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் தங்கள் பகுதிக்கு அருகாமையிலுள்ள தபால் நிலையம் மற்றும் தபால்காரரிடம் சென்று பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதுதொடர்பாக கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால் உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்