ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து சாவு
பொறையாறு அருகே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த மாணவரை 3 மணி நேரம் வெயிலில் பயிற்சியில் ஈடுபடுத்தியதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பொறையாறு:
பொறையாறு அருகே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த மாணவரை 3 மணி நேரம் வெயிலில் பயிற்சியில் ஈடுபடுத்தியதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிளஸ்-2 மாணவர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி நித்தியா. இவர்களுடைய மகன் ரிஷிபாலன்(வயது17). இவர் செம்பனார்கோவிலில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
பொறையாறு அருகே காட்டுச்சேரி சமத்துவபுரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தரங்கம்பாடி தாலுகா அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 45 பள்ளிகளை சோ்ந்த சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பரிதாப சாவு
இதில் மாணவர் ரிஷிபாலன் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலக்கை நோக்கி ஓடினாா். அப்போது ரிஷிபாலன் திடீரென மயங்கி மைதானத்தில் சுருண்டு விழுந்தார். உடனே அங்கு இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் ரிஷிபாலனை மீட்டு பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு ரிஷிபாலனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசில் தாய் புகார்
விளையாட்டு போட்டிக்கு சென்ற ரிஷிபாலன் உயிரிழந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு கதறி அழுத மாணவரின் தாய் மற்றும் உறவினர்கள் பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரிஷிபாலன் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து ாிஷிபாலனின் தாய் நித்யா, பொைறயாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாா்.
கடும் வெயிலில்...
அதில், ரிஷிபாலன் மயங்கி விழுந்த உடன் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்ததாகவும், போட்டியை தொடங்கி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் தாமதமாக வந்ததாகவும், 3 மணி நேரம் கடும் வெயிலில் நிற்க வைத்து மாணவரை பயிற்சியில் ஈடுபடுத்தியதாகவும், மாணவர் மயங்கி விழுந்த தகவலை தங்களுக்கு உடனடியாக தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும் மாணவன் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் பொறையாறு அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பொறையாறு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் மாணவர் சாவுக்கு காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை காந்திஜி சாலை, அரசு மருத்துவமனை சாலை சந்திப்பில் பா.ஜனதா மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் இறந்த மாணவனின் உறவினர்கள், பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சிங்காரவேலன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக மயிலாடுதுறை காந்திஜி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.