தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
விருத்தாசலத்தில் பெற்றோர் ஆசைப்படி கலெக்டராக முடியாததால் தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம்
விருத்தாசலம் ஆயியார் மடத்தெருவை சேர்ந்தவர் கோபி மகள் சிவகாமி(வயது 17). இவர் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிவகாமி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரது உடலை கட்டித்தழுவி கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசுக்கு தெரிவிக்காமல் மாணவியின் உடலை அடக்கம் செய்து விடலாம் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் நினைத்தனர். அதன்படி நேற்று காலையில் மாணவிக்கு இறுதி சடங்கு செய்து, இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
கடிதம் சிக்கியது
இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று சிவகாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாணவியின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதியிருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில் மாணவி எழுதியிருப்பதாவது:-
கலெக்டராக முடியாது
பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற கணித தேர்வை நான் சரியாக எழுதவில்லை. தமிழ் தேர்வுக்கும் நான் சரியாக படிக்கவில்லை. நான் நன்றாக படித்து கலெக்டராக வேண்டும் என்று எனது பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த அளவிற்கு என்னால் படிக்க முடியவில்லை. கலெக்டராகவும் முடியாது. இது பற்றி அறிந்ததும் பெற்றோரும் என்னிடம் சரியாக பேசுவதில்லை. இப்படியே படித்தால் என்னை விரைவில் திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். ஆதலால் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். நான் கடவுளிடம் செல்கிறேன். எனது உடலை பார்க்க பள்ளி நண்பர்கள் வருவார்கள். அவர்களை அனுமதிக்கவும்.
இவ்வாறு கடிதத்தில் மாணவி எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.