செஞ்சி அருகே பிளஸ்-1 மாணவி கர்ப்பம்; 2 பேர் கைது
செஞ்சி அருகே பிளஸ்-1 மாணவி கர்ப்பமான விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செஞ்சி,
பிளஸ்-1 மாணவி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் வயிற்று பகுதி வீக்கமாக காணப்பட்டது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய தாய் மாணவியை பரிசோதனைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவியை, டாக்டர் பரிசோதனை செய்தபோது, மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, தான் பள்ளிக்கு செல்லும் போது பழக்கம் ஏற்பட்ட சிட்டாம்பூண்டியை சேர்ந்த விஜயகுமார் மகன் விஷ்ணு, ஆரிமுத்து மகன் மோகன்ராஜ் (வயது 23), சேரனூரை சேர்ந்த சம்பத் மகன் சிவகுமார் ஆகியோர் தான் எனது கர்ப்பத்துக்கு காரணம் என கூறினார். மேலும் சிவகுமாரின் நண்பரான சிட்டாம்பூண்டியை சேர்ந்த பிரதீப் என்பவர் உடந்தையாக இருந்ததாகவும் மாணவி கூறினார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மாணவியின் தாய் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மோகன்ராஜ், சிவக்குமார் மற்றும் உடந்தையாக இருந்த பிரதீப் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷ்ணு வழக்கு ஒன்றில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.