மேல்மலையனூர் அருகேஅரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; பிளஸ்-1 மாணவர் சாவுதேர்வு எழுதிவிட்டு வந்தபோது பரிதாபம்
மேல்மலையனூர் அருகே அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேல்மலையனூர்,
பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மேல்வைலாமூர் கிராமத்தைச் சேந்தவர் குப்புசாமி மகன் தினேஷ் (வயது 16). அவலூர்பேட்டை அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் நேற்று பள்ளியில் பிளஸ்-1 தமிழ் தேர்வை எழுதிவிட்டு தன்னுடன் படிக்கும் சக மாணவர்களான மேட்டுவைலாமூரை சேர்ந்த சேட்டு மகன் திருமலை (16), தாழங்குணம் சாமிநாதன் மகன் தினேஷ் (16) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை குப்புசாமி மகன் தினேஷ் ஓட்டினார். மேல்மலையனூர் அடுத்த குந்தலம்பட்டு பஸ் நிறுத்தம் வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் குப்புசாமி மகன் தினேஷ் படுகாயமடைந்தார். மற்ற 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
சிகிச்சை பலனின்றி மாணவர் சாவு
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய தினேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் தினேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.