கல்குவாரி குட்டையில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி

குஜிலியம்பாறை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார். உடலை பிரேத பாிசோதனைக்கு கொண்டு செல்ல விடாமல் பெற்றோர், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-12 19:00 GMT

பிளஸ்-1 மாணவர்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள பண்டிதகாரனூரை சேர்ந்தவர் செந்தில். கூலித்தொழிலாளி. இவரது மகன் தெய்வபிரசாந்த் (வயது 17). இவர் குஜிலியம்பாறை அருகே ஆர்.வெள்ளோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்தார். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை விட்ட நாளில் இருந்து தெய்வபிரசாந்த், தனது நண்பர்களுடன் விளையாட செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தெய்வபிரசாந்த் விளையாட செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்னர் அவரும், நண்பர்களும் சங்கியப்பகவுண்டனூரில் கரிக்காலி சிமெண்டு ஆலைக்கு அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். அங்கு குளித்துக்கொண்டிருந்தபோது தெய்வபிரசாந்த் மட்டும் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாத நிலையில் அவர் நீரில் மூழ்கினார்.

குட்டையில் மூழ்கினார்

இதற்கிடையே இரவு வெகு நேரமாகியும் தெய்வபிரசாந்த் வீட்டிற்கு திரும்பிவராததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அவர்கள், தங்களது உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து மாணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவனின் நண்பர்களிடம் விசாரித்தபோது, சங்கியப்பகவுண்டனூரில் கல்குவாரி குட்டையில் தெய்வபிரசாந்த் மூழ்கியது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கல்குவாரி குட்டையில் இறங்கி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த கல்குவாரி குட்டை சுமார் 150 அடி ஆழம் கொண்டது. மேலும் இரவு நேரம் என்பதால் மின்விளக்கு வசதி இல்லாததால் மாணவரை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

கிராம மக்கள் போராட்டம்

பின்னர் நேற்று காலை மீண்டும் மாணவரை தேடும் பணி தொடங்கியது. சுமார் 4 மணி நேர தேடுதலுக்கு பிறகு குட்டையில் இருந்து தெய்வபிரசாந்த் பிணமாக மீட்கப்பட்டார். இதனை பார்த்த மாணவரின் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் மாணவரின் உடலை குஜிலியம்பாறை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது உடலை கொண்டு செல்ல விடாமல் மாணவரின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், சிமெண்டு ஆலைக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்துபோன மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பிறகு சிமெண்டு ஆலை நிர்வாகத்தினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று சிமெண்டு ஆலை நிர்வாகத்தினர் கூறியதை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்