செருப்பு வாங்கியதை பாட்டி கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சி
ஆத்தூரில் செருப்பு வாங்கியதை பாட்டி கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்,
பிளஸ்-1 மாணவி
ஆத்தூர் நகராட்சி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள், ஆத்தூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளி வகுப்பறையில் திடீரென அந்த மாணவி மயக்கம் போட்டு விழுந்தார்.
உடனே அந்த மாணவி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அந்த மாணவியிடம் ஆத்தூர் டவுன் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
செருப்பு வாங்கியதை கண்டித்தார்
இதில், மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. மேலும் மாணவி பாட்டியின் பராமரிப்பில் உள்ளார். பாட்டி கூலி வேலைக்கு சென்று கூலியாக கிடைத்த ரூ.650-யை சேர்த்து வைத்திருந்தார். அந்த பணத்தை மாணவி எடுத்து செருப்பு வாங்கியதாக கூறப்படுகிறது.
கூலிவேலைக்கு சென்று பணத்தை சேர்த்து வைத்திருந்தால் அந்த பணத்தில் செருப்பு வாங்குகிறாயா? என்று பாட்டி தனது பேத்தியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அந்த மாணவி, வீட்டில் பாட்டி வைத்திருந்த சர்க்கரை நோய்க்கான 15 மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வந்து மயக்கம் அடைந்ததாக போலீசாரின் விசாரணையில் அவர் கூறியுள்ளார்.
பின்னர் அந்த மாணவி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.