போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
நாமக்கல்லில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.
உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி, கலையரங்கத்தில் நேற்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் கலெக்டர் உமா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் நாமக்கல் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.
தடுப்பு நடவடிக்கை
அப்போது போதைப்பொருட்களை பயன்படுத்தமாட்டோம், தனது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் போதைப்பொருட்கள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு மற்றும் பயன்பாட்டிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்கு துணை நிற்பேன் எனவும் மாணவிகள் உறுதி ஏற்றுக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையத்தில் பயின்று 2022-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் தேர்வான 17 மாணவர்களுக்கும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வில் தேர்வான ஒரு மாணவனுக்கும் கலெக்டர் உமா சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி, பாராட்டுக்களை தெரிவத்தார்.
கல்வி உதவித்தொகை
மேலும், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்த 4 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், உதவி ஆணையர் (தொழிலாளர்) திருநந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா மாயவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.