தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிவகங்கை அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிவகங்கை அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியடிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் துணை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் அன்புடன் அரவணைப்பதன் மூலம் அவர்கள் சீரான மனநிலையிலும், இயல்பாக வாழ்வதற்கும் அடிப்படையாக அமைகிறது. இன்றைய மருத்துவ வளர்ச்சியில் நோய் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை மேற்கொள்ளும் போது நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதுடன், அதனை எளிதில் குணப்படுத்துவதற்கான வழிமுறைகளும் தற்போது உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தொழு நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் உரிய ஆலோசனையின்படி முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு தங்களது உடல்நலத்தினை பேணிக்காத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் தர்மர், சுகாதாரத்துறை துணை இயக்குனா்கள் கவிதாராணி (தொழுநோய் பிரிவு), டாக்டர் யோகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.