குரங்குகளை பிடிக்க வேண்டும்
தஞ்சை அருகே வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசப்படுத்தும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை அருகே வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசப்படுத்தும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரங்குகள் தொல்லை
தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிகாட்டை சேர்ந்த பெண்கள் பலர், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-எங்களது ஊரில் உள்ள வடக்கு தெருவில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட மளிகை சாமான்களை தூக்கிச் சென்று வீணாக்கி விடுகிறது. மேலும் குரங்குகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் வசித்து வரும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டு மனைப்பட்டா
பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி கீழத்தெரு, புது காலனி பகுதியை சேர்ந்த மக்கள் பலர் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் வசிக்கும் 40-க்கும் மேற்பட்டோருக்கு ஆதிதிராவிடர் நலத்துறையால் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. வருங்கால உபயோகம் என்று ஒதுக்கப்பட்ட கோவில், பள்ளிக்கூடம், விளையாட்டு திடல், குடிநீர் நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றுக்கான இடங்களை சம்பந்தமில்லாத நபர்கள் சிலர் ஆக்கிரமித்து இரவோடு இரவாக 30 கொட்டகைகள் போட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.