சிவன்மலையில் தொடங்கப்பட உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி, சிவன்மலை கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் முறையீட்டனர்.
பிளாஸ்டிக் தொழிற்சாலை
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கயம், சிவன்மலை கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவன்மலை கிராமத்தில் தனியார் இருவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த தொழிற்சாலை விவசாய நிலத்திற்கு அருகில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி, வீடுகள், தோட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் மற்றும் கால்நடை மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை உள்ளன. இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்றினால் நுரையீரல் புற்றுநோய், மூச்சு திணறல், சுவாச பாதிப்பு போன்ற எண்ணற்ற கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தடை விதிக்க வேண்டும்
இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை ஏற்படும். மேலும் இந்த ஆலையில் இருந்து வெளிவரக்கூடிய நச்சு காற்றினால் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய கால்நடைகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.