பிரதமர் மோடி அணிந்திருந்த விசேஷ உடைக்கு கரூரில் இருந்து அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் துணி

பிரதமர் மோடி அணிந்திருந்த விசேஷ உடைக்கு கரூரில் இருந்து பிளாஸ்டிக் துணி அனுப்பப்பட்டது.

Update: 2023-02-12 18:45 GMT

கரூர்,

கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற மக்களவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அப்போது அவர் நீல வண்ண விசேஷ உடை (கோட்) அணிந்து இருந்தார். இந்த கோட் உலக அளவில் பிரபலமாக பேசப்பட்டு டிரண்டிங் ஆனது.

இதற்கு காரணம் இந்த உடை முழுக்க முழுக்க பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்டது ஆகும். இதுகுறித்து விசாரிக்கையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த இந்திய எரிசக்தி வார விழாவில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. இவை கரூரில் உள்ள ரெங்கா பாலிமர் எனப்படும் நிறுவனம் தயாரித்து உள்ளதும் தெரியவந்தது.

சுத்தம் செய்ய மட்டுமே தண்ணீர்

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் கூறியதாவது:-

தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை ஒருங்கிணைத்து மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து பாலிஸ்டர் நூல் தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் 50-க்கும் மேற்பட்டவை உள்ளன. இருப்பினும் அந்த நூல்களில் இருந்து துணி தயாரிக்கும் நிறுவனம் கரூரில் மட்டுமே உள்ளது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து அவற்றை எந்திரம் மூலம் கூழாக்கப்பட்டு, அதில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த பாட்டில்கள் சுத்தம் செய்ய மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

28 பாட்டில்கள் மூலம்...

மற்ற உற்பத்தி செயல்களுக்கோ துணி தயாரிக்கும்போது தண்ணீர் பயன்படுத்துவது கிடையாது. நூல்களுக்கு சாயம் விட டோப் டையிங் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் தண்ணீர் தேவைக்கு வாய்ப்பே இல்லை. கோட் ஜாக்கெட், டீ-சர்ட் உள்ளிட்ட பல்வேறு துணிகள் இதன் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீருடை தயாரிக்க அணுகி இருந்தனர்.

அப்போது இந்திய எரிசக்தி வார விழா நிகழ்விற்காக பிரதமர் மோடிக்கு ஜாக்கெட் வழங்க வேண்டி இந்த பாலிஸ்டர் துணியை கேட்டனர். அதன்படி 9 கலர் துணிகளை அவர்களுக்கு அனுப்பிவைத்தோம். அதில் பிரதமர் மோடி தேர்வு செய்த இளம் நீல நிறத்திலான துணி கொண்டு குஜராத் தையல் கலைஞர்கள் மூலம் கோட் தைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 28 பாட்டில்களை கொண்டு தயாரிக்கப்பட்ட துணி மூலமாக இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது

மற்ற நூல்களை விட மறுசுழற்சியால் கிடைக்கப்பெற்ற பாலியஸ்டர் நூலின் விலை 50 சதவீதம் குறைவாக இருக்கும். இதன் மூலம் பிரதமர் மோடி அணிந்திருக்கும் ஜாக்கெட் விலை ரூ.2 ஆயிரம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு கரூரில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பழைய பிளாஸ்டிக் பெட் பாட்டில்களை வாங்கி அதில் இருந்து நூல் மட்டுமே முதலில் தயாரித்து வந்தோம். பின்னர் அதனை கலரிங் செய்து கலர் நூலாக்கி ஜவுளிகள் உற்பத்தி செய்து வந்தோம். அதனையடுத்து ரெடிமேட் ஆடைகளையும் உற்பத்தி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்