சதுரகிரி மலையில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
சதுரகிரி மலைப்பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு,
சதுரகிரி மலைப்பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்களுக்கு அனுமதி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாட்டில்கள் குவியல்
இவ்வாறு வந்த பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை ஆங்காங்கே போட்டு செல்கின்றனர். இதனால் மலைப்பகுதியில் ஆங்காங்கே பாட்டில்கள், பைகள் குவியல், குவியலாக கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது இந்த மலைப்பகுதியானது பாதுகாக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகப் பகுதியாகவும் உள்ளது. இந்த மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்து இருந்தும், முறையான சோதனை இல்லாததால் பக்தர்கள் சர்வ சாதாரணமாக தடை செய்யப்பட்ட பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை
ஆதலால் மலைப்பகுதியில் குவிந்து கிடக்கும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்களை சோதனை செய்வதை இன்னும் தீவிரப்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களை மலை பகுதிக்கு கொண்டு செல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.