பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9¾ லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு-கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி:
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9¾ லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
பசுமை தமிழகம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் பின்புறம் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழகம் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி முன்னிலை வகித்தார்.
விழாவையொட்டி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-
இலக்கு நிர்ணயம்
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பசுமை போர்வையினை 23.27 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் விவசாய நிலம், தரிசு நிலம், கல்வி நிறுவனங்கள், கோவில் நிலங்கள், தொழில் நிறுவனங்களின் பகுதிகள், அரசு அலுவலக வளாகங்கள், தரம்குன்றிய காப்புகாட்டு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டு 9 லட்சத்து 86 ஆயிரத்து 5 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாற்றாங்கால் உற்பத்தி செய்யப்பட்டு, மரக்கன்று நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திட்டம் தயார்
2023-2024-ம் ஆண்டில் மரக்கன்றுகள் நடும் பணிக்கு மாவட்ட அளவிலான செயலாக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி வன பாதுகாவலர்கள் வெங்கடபிரசாத், ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள் மகேந்திரன், ரவி, சீதாராமன், முருகேசன், சுகுமார், சோமசேகர், வீரமணி, குமார், தனி தாசில்தார்கள் ஜெய்சங்கர், ராமசந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.