கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி கிராமத்தில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த 5 ஆண்டுகளாக இயங்காமல் இருந்தது. தற்போது இந்த ஆலையை தேசிய சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஒரு புதிய நிறுவனம் எடுத்து நடத்த முன்வந்து ஆலை சீரமைப்பு பணிகள் மற்றும் கரும்பு சாகுபடி பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் இதுவரை 2 தவணை வழங்கப்பட்டு உள்ளது. தற்போது மீதமுள்ள 2 தவணை தொகையினை இம்மாத இறுதிக்குள் மத்திய அரசு பரிந்துரையின் படி விவசாயிகளுக்கு சேர வேண்டிய பாக்கித்தொகையை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதிக்குள் முழுமையாக வழங்கப்பட்டு விடும் என புதிய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து திரு ஆரூரான் சர்க்கரை ஆலை பகுதி விவசாயிகள் நடப்பாண்டுக்கான கரும்பு நடவு சாகுபடியை தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக கரும்பு நடவு செய்த மற்றும் வெட்டி வயல்களில் கட்டை கரும்பு ஆலைக்கு பதிவு செய்து வரும் பணியும் நடைபெற்று வருகிறது. நேற்று கபிஸ்தலம் அருகே உள்ள தியாகசமுத்திரம் கிராமத்தில் ராஜ்குமார் என்ற விவசாயி வயலில் செயல் விளக்கத்துடன் கரும்பு நடவு பணி தொடங்கப்பட்டது. நடப்பாண்டு 10ஆயிரம் ஏக்கர் கரும்பு நடவு செய்யவும், 3 லட்சம் டன்கள் கரும்பு 2023-24-ம் ஆண்டு அரவை செய்யவும் ஆலை நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதில் ஹால்ஸ் நிர்வாகத்தின் தலைமை ஆலோசகர் முனுசாமி, முதுநிலை ஆலோசகர் கந்தசாமி, களப்பணியாளர்கள் கொளஞ்சியப்பன், சந்தானகிருஷ்ணன், செந்தில்நாதன், சத்குரு, மாதவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.