அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரக்கன்றுகள் நடவு
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கீரை, சூப் வழங்க அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு
ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறியும் பணி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்து 39 ஆயிரம் குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு வந்து செல்கின்றனர்.
இதில் 32 ஆயிரம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டன. அதிலும் 7 ஆயிரத்து 700 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஆவர். இதையடுத்து 32 ஆயிரம் குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
முருங்கை கீரை- சூப்
இந்த குழந்தைகளுக்கு முருங்கை கீரை, முருங்கை சூப் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி செட்டிநாயக்கன்பட்டி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் விசாகன் கலந்து கொண்டு முருங்கை மரக்கன்றுகள் நட்டு, நடவு பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.